சென்னை: தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (2.12.2022) திறந்து வைத்தார்.
கி.ராஜநாராயணன் கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டு “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
கி.ராஜநாராயணனுக்கு இலக்கிய சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாவல்கள் மூலம் எண்ணற்றோர் இதயங்களில் வாழ்ந்த கி.ராஜநாராயணன் 17.05.2021 அன்று மறைந்தார்.
தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் (கி.ரா.) நினைவினைப் போற்றும் வகையில், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.