சென்னை:பேராசிரியர் கோ. ரகுபதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்தவர். இவர் ஆய்வுக் கட்டுரைகள், நூல்களின் ஆசிரியரும், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினருமாக உள்ளார். இவர் எழுதிய திராவிட மதம் என்ற புத்தகம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது தொடக்கக் கல்வியை தேரிப்பனை நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை நாசரேத் மர்காஷியஸ் பள்ளியிலும் பயின்றார். அதைத் தொடர்ந்து அவர் நாசரேத், பிள்ளையான்மனை மர்காஷிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை, மற்றும் முனைவர் பட்டங் களையும் பெற்றார்.
தமிழில் வெளியாகும் தினசரி நாளிதழ் ஒன்றில் நிருபராகவும் ஓர் ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். அதற்கு பின் தான் பயின்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூக விலக்கல் மற்றும் உட் கொணர்வு ஆய்வு மையத்தில் இணை ஆராய்ச்சியாளராக இரண்டரை ஆண்டுகளும் பணியாற்றினார்.
கடந்த 2011ஆம் முதல் சேலம் மாவட்டம் ஆத்தூர், வடசென்னிமலை, அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி, திண்டிவனம். ஆ. கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தற்போது தமிழக அரசு புதிதாக நிறுவியுள்ள "தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில்" உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.
இவர் தன் ஆய்வுகளின் மூலம், காந்தியின் ஸநாத அரசியல், போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும், காவேரிப் பெருவெள்ளம், தீண்டாமைக்குள் தீண்டாமை, திராவிட மதம், திராவிடப் பத்திரிகைகளில் ஆதிதிராவிடர் ஆவணங்கள், உள்ளிட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
"திராவிட மதம்" ஆய்வு நூல்களில் கருத்து எந்த புள்ளியில் தொடங்கியது:"பொதுவாக முனைவர் பட்ட ஆராய்ச்சி காலத்தில் இருந்து, ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து படித்து வருகிறேன். அந்த கட்டுரைகள் நூல்கள், இதுவரை நாம் பார்த்திராத புதிய செய்திகள், விஷயங்கள்,கருத்துகளை தேர்ந்தெடுத்து படிப்பது உண்டு. 2015-16 ஆண்டில் அந்த நூலை கண்டெடுத்தன. அந்த புத்தகத்தின் தலைப்பே மிகவும் வித்தியாசமாக இருந்தது. உள்ளிருக்கும் பொருளடக்கம் இன்றைய சூழ்நிலையில் மிக அவசியமானது ஒன்று. அந்த நூலின் ஆசிரியர் அலர்மேன்மங்கை அம்மாள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நூலில் அலர்மேன்மங்கை அவர்களின் வேறு எந்த குறிப்பும் இல்லை, அவர்கள் பெயருக்கு முன், சென்னை, பண்டிதை, அவர்களை குறித்து நிறைய தேடியுள்ளேன், ஆனால் எந்த ஒரு தகவல்கள் கிடைக்கவில்லை"