சென்னை:தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கடந்த 2022 மற்றும் 2023இல் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக "அயலகத் தமிழர் தினம் 2024" ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்களில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தமிழ் வெல்லும்" என்ற கருப்பொருளில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அமர்வுகள், சிறப்பு கண்காட்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்களுக்கு "அயலகத் தமிழர் தினத்தில்" முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.