'பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்' என்ற பழமொழி நம்மில் பிரபலமானவை. காரணம் பாம்பு கடித்தால் உயிர் போய்விடும் என்ற பயம். ஆனால் பாம்புகள் அனைத்தும் விஷத்தன்மை கொண்டவை கிடையாதுங்க. குறிப்பிட்ட சில வகை பாம்புகள் மட்டும்தான் விஷத்தன்மை கொண்டது. பாம்புகள் மூன்றாயிம் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் 600 வகை பாம்பு மட்டும் தான் விஷத்தன்மை கொண்டவை. அவற்றிலும் பெரும்பாலான பாம்புகள் தனக்கு தேவையான இரையை தேடும் போது தான் விஷத்தை பயன்படுத்துகின்றன. இந்தியாவை பொறுத்தவரை 270 பாம்பினங்கள் உள்ளது. இதில் நல்ல பாம்பு, விரியன், வரியன், கடல்பாம்பு உள்ளிட்ட நான்கு வகைகளுக்கு தான் மனிதனை கொல்லக்கூடிய விஷத்தன்மை உள்ளது. பாம்பின் எச்சில் தான் விஷமாக மாறுகிறது இந்த எச்சிலில் புரதமும், அமினோ அமிலமும் அடங்கி இருக்கிறது.
பாம்பின் இயல்பு:
எங்கே நம்மை தாக்கி விடுவார்களோ என்ற பயத்தில் மனிதனை பார்த்த உடனே பாம்புகள் ஓடும் சுபாவம் கொண்டது. ஆனால் அதை நாம் தாக்கினால் தான் அது நம்மை தாக்கும்.
பாம்பு வாழும் இடம்:
பாம்புகள் வட, தென் துருவத்தை தவிர்த்து உலகின் அனைத்து பகுதியிலும் வாழ்கிறது. மலைகள், காடுகள், சதுப்புநிலங்கள் என அனைத்தும் அவற்றிக்கு வாழ ஏற்ற இடங்களாகும். இதன் அளவு 10 செ.மீட்டரில் இருந்து 10 மீட்டர் வரை வளரும். இதை தவிர்த்து உலகிலேயே அதிக நீளம் கொண்ட பாம்பு தென் அமெரிக்காவில் வாழும் அனகோண்டா பாம்பு தான். இதன் எடை 200 கிலோ ஆகும்.
ஆதிகால வரலாறு:
பாம்பினங்கள் தோன்றி 13 கோடி ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. பல்லிகளில் இருந்து தான் பாம்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்புகளுக்கு அதிர்வலைகளை உணரும் சக்தி, நுகர்ந்து பார்க்கும் திறன் அதிகம்.
பாம்பினால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்:
நமது உணவு பொருட்கள் அழிக்கும் உயிரினங்களில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது எலிகள். இந்த எலிகளை கட்டுபடுத்துவதில் பாம்புகள் முக்கிய பங்காற்றுகிறது. பாம்புகள் பெரும்பாலும் எலிகள், தவளை மற்றும் சில பூச்சியினங்களை உணவாக உண்ணுகின்றன. ஒரு உணவு குடோனில் ஆறு எலிகள் இருந்தால் நாம் உண்ணும் ஆறு மடங்கு உணவை நாசம் செய்யும் சக்தி அவற்றிக்கு உண்டு. ஆகையால், இந்த எலிகளின் பெருக்கத்தை பாம்புகள் கட்டுபடுத்தி மனிதனுக்கு பெரும் பங்காற்றுகின்றன. மேலும், பாம்பின் விஷத்தில் இருந்து உயிரை காப்பாற்ற கூடிய பல அரியவகை மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதையெல்லாம் மறந்து விட்டு பாம்புகளை(எந்த பாம்பானலும்) பார்த்தவுடன் நம்மை கடிக்க தான் வருகிறது என்று நினைத்து தலையிலேயே அடித்து கொள்கிறோம்.
பாம்பை தெய்வமாக வழிபடும் இந்தியர்கள்:
பாம்பானது தெய்வத்தின் மறுஉருவம் என இந்தியர்கள் ஆலயங்கள் எழுப்பி வணங்கி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நல்லபாம்பை அடித்துக் கொன்றால் அதற்கு பால், பச்சரிசி, ஒரு ரூபாய் நாணயம், மஞ்சள், புதுதுணி உள்ளிட்டவை சேர்த்து பாம்பு உடலை அடக்கம் செய்கிறோம்.
இப்படி பாம்பு இறந்தவுடன் மரியாதை செய்யும் நாம், அது உயிருடன் இருக்கும் போது அதனை காக்க ஏன் முயற்சி எடுப்பதில்லை. காரணம் அதன்மீது உள்ள பொய்யான கூற்று. பாம்பு பழிவாங்கும், பாம்பை மிதித்தால் வீடு தேடிவந்து கடிக்கும் என்பதுதான். இந்த மூடநம்பிக்கைகளை களைந்து நமக்கு உதவும் நண்பனான பாம்புகளைப் பாதுகாக்க இந்த உலக பாம்பு தினத்தில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.