தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பால் விலைக்குறைப்பிற்குப் பின் 26 லட்சம் லிட்டர் வரை விற்பனை! - அமைச்சர் சா.மு. நாசர்

உலக பால் நாளை முன்னிட்டுச் சிறப்பாகச் செயல்பட்ட தொழிலாளர்களுக்குப் பரிசுப் பொருள்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் ஆவின் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

ஆவின் நிர்வாகம்
ஆவின் நிர்வாகம்

By

Published : Jun 2, 2021, 10:38 AM IST

சென்னை: ஆவின் பாலின் விலைக்குறைப்பிற்குப் பின்னர் சுமார் 26 லட்சம் லிட்டர் வரை விற்பனை உயர்ந்துள்ளது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மூலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலக பால் நாள் உலகம் முழுவதும் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டுவருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, வேளாண்மை அமைப்பு (FAO) பாலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும்பொருட்டு 2001 முதல் ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி உலக பால் நாளாக அறிவித்தது. தமிழ்நாட்டில் பால் கொள்முதல், விற்பனையில் ஆவின் நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆவின் நிறுவனத்தால் உலக பால் நாள் நேற்று (ஜூன் 1) ஆவின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 36 லட்சம் லிட்டர் நாள்தோறும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்துவந்தது.

தற்போது கரோனா பெருந்தொற்றை முன்னிட்டு, சில தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்திய நிலையில், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, இப்பேரிடர் காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள் எவ்வித பாதிப்புகளுக்கும் உள்ளாகாதவகையில் அவர்களிடமிருந்து மொத்தப்பாலையும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது. எனவே தற்போது நாளொன்றுக்கு சுமார், நான்கு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்து சுமார் 40 லட்சம் வரை நாளொன்றுக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல்செய்யப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தினசரி பால் விற்பனை சுமார் 24 லட்சம் லிட்டர் வரை இருந்தது. தற்போது விலைக்குறைப்பிற்கு பின்னர் சுமார் 26 லட்சம் லிட்டர் வரை விற்பனை உயர்ந்துள்ளது. மேலும் புதிய சாதனையாக சென்னையில் கடந்த மே 23ஆம் தேதியன்று 15.04 லட்சம் லிட்டர், பிற மாவட்டங்களில் மே 22ஆம் தேதியன்று 12.59 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமுமின்றி பால், பால் உபபொருள்கள் கிடைக்க, ஆவின் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்கு விநியோகம் செய்வதற்காக சொமொட்டோ (ZOMATO), டுன்சோ (DUNZO) நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாள்தோறும் 700-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் நுகர்வோர்கள் மூலம் பெறப்பட்டு ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள பால், பால் உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பால் நாளை முன்னிட்டு ஆவின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாகச் செயல்பட்ட பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம், மொத்த பால், பால் உபபொருள்கள் விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பால் அட்டை நுகர்வோர்கள், நுகர்வோர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்களை பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் சா.மு. நாசர், ஆவின் மேலாண்மை இயக்குநர் இரா. நந்தகோபால் வழங்கி சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: பிளஸ் டூ தேர்வு எப்போது? - முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details