தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலாடிகளின் போராட்டங்கள் நெஞ்சுரத்தைத் தருபவை - இன்று உலக மீனவர்கள் தினம்! - World Fisheries day November 21

உலகம் முழுவதும் இன்று மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பரந்து விரிந்த கடலில் உயிரைப் பணயம் வைத்து மீன்களைப் பிடித்து வரும் மீனவர்களின் வாழ்வியல் முறைகளையும், துயரங்களையும், உலக உணவு சுழற்சியில் அவர்களது பங்களிப்பையும் நாம் அவ்வளவு எளிதில் தவிர்த்துவிடமுடியாது.

World Fisheries day

By

Published : Nov 21, 2019, 1:08 PM IST

உணவுப் பொருள் தொடங்கி ஆடம்பரப் பொருள் வரை மனிதனுக்குக் கடல் அள்ளிக் கொடுக்கும் பொருட்கள் தான் எத்தனை எத்தனை... ஆழ்கடலுக்குள் சென்று விதவிதமான மீன்களைப் பிடித்துக் கொண்டு வருபவர்கள் மீனவர்கள். மீன் வகை உணவுகளுக்குத் தமிழ்நாடு மக்களிடையே எப்போதும் வரவேற்பு உண்டு. தமிழ்நாடு கடற்பரப்பில் மட்டுமல்லாது ஆறுகள், அணைப்பகுதிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் பலவகையான மீன் வகைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் மீன்பிடித்தல் மற்றும் வளர்ப்பில் நான்காவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. சுமார் ஆயிரத்து 76 கிலோ மீட்டர் நீள தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன.

வலைகளை உபயோகித்து மீன் பிடித்தல்

கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி டெல்லியில் ஒன்று கூடிய 40 நாடுகளைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் கடலில் மீன்பிடிக்கும் போது ஏற்படும் பிரச்னைகள், மீனவர்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் பேரவையை உருவாக்கினர். அந்த நாளே உலக மீனவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செய்த பின், கடல் வளம் பெருக வேண்டியும், மீன்கள் அதிகளவில் வலைகளில் சிக்க வேண்டியும் கோயில்கள், தேவாலயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றனர்.

உலக மீனவர்கள் தினம்

ஆழ்கடலில் அரிய வகை மீன்களைத் தேடிச் செல்லும் மீனவர்கள் இயற்கைச் சீற்றம், அண்டை நாட்டு கடற்படையினரின் அச்சுறுத்தல், திடீர் புயல், மழை என அன்றாடம் சந்திக்கும் சவால்கள் ஏராளமாக இருக்கிறது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளோடுதான் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனர் மீனவர்கள். அவ்வாறு செல்லும் மீனவர்களின் வலைகளில் இறால், வஞ்சிரம், கானாங்கத்தி, வெள்ளை வவ்வால், வாளை எனப் பல வகைகளில் மீன்களும், நண்டு இனங்களும் கிடைப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், தனுஷ்கோடியில் வசித்து வரும் பாரம்பரிய மீனவர்கள் மட்டும் நாட்டுப்படகு, விசைப்படகுகள் எடுத்துக்கொண்டு ஆழ்கடலுக்குச் செல்லாமல், தற்போது வரை கரை வலை மீன் பிடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு வகையான மீன்கள்

ஆழ்கடல் மீன்பிடிப்பின்போது பிரச்னைகள் ஏற்பட்டால் வாக்கி-டாக்கி மூலமாகக் கடற்படையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது நவீன சேட்டிலைட் போன் மற்றும் ரேடியோ டெலிபோன் வழங்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு சவால்களைக் கடந்து மீன்பிடித்து வரும் மீனவர்களுக்கு நுகர்வோரும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு அடிகோலும் மக்களுக்கு மீனவர்களும் நன்றி சொல்லும் நாளாக அமைகிறது இன்றைய உலக மீனவர் தினம்..!

இதையும் படிங்க: பஞ்சமி நிலம்; இரு கட்சிகளின் பிரச்னை மட்டும் அல்ல...

ABOUT THE AUTHOR

...view details