உலகத்தில் அனைத்துக்கும் ஏதேனும் ஒரு நாளைக் கொண்டாடுவோம். அப்படி இன்றைக்கு புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு தினத்திலும் புத்தகத்தைக் கொண்டாட வேண்டும்.
எதுவும், யாரும் நிலையில்லாத இந்த உலகத்தில் நிலையானது புத்தகங்கள் மட்டுமே. மிருகத்திலிருந்து வந்ததால் என்னவோ மனிதன் இன்னமும் மிருகமாக இருக்கிறான். ஆனால், மிருக நிலை என்பது பழைய நிலை மனித நிலையில் நிலைகொள் என்று அனைவருக்கும் உணர்த்துவது புத்தகங்கள்.
வாசிப்பை சுவாசிப்பாய் ஏற்றுக்கொண்ட மனிதர்களைப் பொறுத்தவரையில் நேரம் போகவில்லை என்பதைவிட நேரம் போதவில்லை என்றே இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் மூளைக்கு ஓய்வென்பது கிடையாது. ஓய்வின்மை எல்லாருக்கும் தொய்வைக் கொடுத்தாலும் வாசிப்பாளர்களுக்கு மட்டும் அது சுகானுபவமாக இருக்கும்.
மன உளைச்சல், மனச் சோர்வுக்கு இந்த உலகம் ஏகப்பட்ட வைத்தியங்களை வைத்திருக்கிறது. ஆனால், எந்தத் தொந்தரவும் இல்லாத வைத்தியம் நிச்சயம் புத்தகம் மட்டுமே. புத்தகத்தைத் திறக்கையில், நாம் ஒரு புது உலகத்திற்கான தாழ் திறக்கிறோம் என்று அர்த்தம்.
ஒரு புத்தகத்திற்குள் நுழையும்போது அதற்குள் இருப்பது காகிதங்களோ, எழுத்துக்களோ மட்டும் இல்லை. அதையும் தாண்டிய ஒரு உணர்வு. அந்த உணர்வு ஆழமானது, ஆர்ப்பாட்டம் இல்லாதது. காலம், நேரம் கடந்த ஞானத்தைக் கொடுக்கக்கூடியது.