காது கேளாதோருக்கான பேட்மிண்டன் உலகக்கோப்பைப் போட்டி சீன நாட்டில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றார். இதையடுத்து சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் பெற்றோர், உறவினர்கள் மலர்கொத்து தந்து வரவேற்றனர்.
அப்போது ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெய ரட்சகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"ஜெர்லின் அனிகா காதுகேளாதோர் பிரிவில் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விளையாடி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் எட்டு வயதிலிருந்து பேட்மிண்டன் விளையாடிவருகிறார்.
அமெரிக்காவில் நடைபெறவிருக்கின்ற 2021 ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கலந்துகொண்டு வெற்றிபெறுவார். தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையின் வேலைவாய்ப்பினை இரண்டு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காட்டிற்கு உயர்த்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஜெர்லின் அனிகா வெற்றிக்கு அவரது பயிற்சியாளர் சரவணன்தான் மிகவும் தூண்டுகோலாக இருந்தார். தேசியக் கொடியை தூக்கிப்பிடிக்கும் பெருமைதந்த என் மகளை எண்ணி நான் பெருமை அடைகிறேன்.
காது கேளாதோர் பேட்மிண்டன்- தங்கம் வென்ற ஜெர்லின் அனிகா ஒலிம்பிக் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை நாம் நிச்சயம் பெறுவோம். தற்போது ஜெர்லின் அனிகா அரசுப் பள்ளியில் பயின்றுவருகிறார். பள்ளி சார்பில் அவருக்கு மிகவும் நல்ல ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.