தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'8 மணி நேரப் பணியை பயிற்சி மருத்துவர்களுக்கு உறுதிபடுத்துங்கள்' - உயர்நீதிமன்றத்தில் மனு!

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் 8 மணி நேரமாகப் ஒதுக்கப்பட்டுள்ள பணி நேரத்தை அமல்படுத்தத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Nov 7, 2019, 10:37 PM IST

கடந்த காலங்களில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டு வந்தனர். இவ்வழக்கத்தை மாற்றி, மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு, 8 மணி நேரமாகப் பணி நேரத்தை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனக்கூறி, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பணிச்சுமை காரணமாக மதுரை மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்பு மாணவர் உதயராஜ் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பணி நேரம் நிர்ணயம் செய்த உத்தரவை அமல்படுத்தாததால் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களின் உடல் நலன் பாதிப்பதுடன், அவர்கள் வழங்கும் சிகிச்சையின் தரமும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுத்துவது மட்டுமல்லாமல், காப்பீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வது போன்ற பிற பணிகளைச் செய்யவும் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எட்டு மணி நேரப் பணி அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், அரசு மருத்துவர்கள் பிற பணிகளில் ஈடுபடுத்தப்படுவதைத் தடுக்கவும் உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீட் ஆள்மாறட்டத்தை தடுக்க கைரேகை பதிய வேண்டும் -உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details