சென்னை:47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு, ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், இதற்கான அரங்குகள் அமைக்கும் பணியானது தற்போது சென்னை நந்தனத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஆண்டுத்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அதில் எப்போதும் வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆர்வமாக எதிர்பார்ப்பது, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி தான்.
சென்னையில் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இருந்தும் இந்த கண்காட்சிக்கு பல்வேறு தரப்பினர் வருகை தந்து, ஆர்வத்தோடு புத்தகத்தை வாங்கிச் செல்வர். மேலும் எழுத்தாளர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கு இந்த கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்தாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல தரப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் படிக்கும் கதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள், ஆங்கில புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் அனைத்து கிடைக்கும். எனவே, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, லட்சக்கணக்கான மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் வருகை புரிந்து, ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கி செல்வர்.