சென்னை: ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில், பயணிகள் இல்லாமல் காலை 5.40 மணி அளவில் ஆவடி 3-வது நடைமேடைக்கு வந்தது. அப்போது மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால், சிக்னலைக் கடந்து 200 மீட்டர் தொலைவில், அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் இருப்புப்பாதையில் ரயிலானது தடம் புரண்டது.
அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக, ஆவடி - சென்னை மார்க்கத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் உள்பட வந்தே பாரத் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், சென்னை செல்ல வேண்டிய அனைத்து புறநகர் ரயில்களும் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாகச் சென்றது.
முன்னதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஆவடி மின்சார ரயில் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது, ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாகவும், இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத், சதாப்தி ரயில்கள், கோவை செல்லும் விரைவு ரயில் என 5 மின்சார ரயில்கள் தாமதமாகச் சென்றதாகவும் தெரிவித்தனர்.