சென்னை:இந்தியா முழுவதும் விமான சேவைகளை விரிவுப்படுத்தி, மேம்படுத்துவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் விமான சேவைகள் அதிக அளவில் இருந்தாலும், விமானங்களில் ஏற்படும் பழுதுகளை சீர் செய்யவும், விமானங்களை பழுதுப் பார்ப்பதற்கும் என மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதை அடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், நாடும் முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 8 சர்வதேச விமான நிலையங்களை தேர்வு செய்தது.
அதில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். சென்னை உள்ளிட்ட 8 சர்வதேச விமான நிலையங்களிலும், விமானங்களை பழுதுப் பார்த்தல், பராமரித்தல், விமானத்தில் பழுதடைந்த உபகரணங்கள் நீக்கிவிட்டு புதிய உபகரணங்கள் பொருத்துதல், விமானங்களுக்கு வர்ணம் பூசி புதுப்பித்தல் போன்றவைகளுக்காக மெயின்டனன்ஸ் ரிப்பேரிங் அண்ட் ஆபரேஷன் எனப்படும் எம்.ஆர்.ஓ (MRO-Maintenance Repair and Operations) மையங்கள் அமைக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், ஏப்ரான் எனப்படும் விமானங்கள் நிறுத்தும் இடத்திற்கு, பின் பகுதியில், இந்த எம்.ஆர்.ஓ மையத்தை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. ஆனால் அதற்கான இட வசதி அந்தப் பகுதியில் இல்லை. இதை அடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சென்னை விமான நிலைய இயக்குனர், தமிழ்நாடு அரசிடம் அதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு கிழக்குப் பகுதியில், கவுல் பஜார் பகுதியை ஒட்டி 32,300 சதுர அடி நிலத்தை, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை மூலமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிக்காக, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் முறைப்படி ஒப்படைத்து உள்ளது. இதை அடுத்து தமிழ்நாடு அரசு சென்னை விமான நிலையத்திற்கு, அளித்துள்ள நிலத்தில், விமானங்கள் பழுதுப்பார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக எம்.ஆர்.ஓ மையத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு நிலம் வழங்கி, ஓராண்டு ஆகிவிட்டாலும், சென்னை ஒருங்கிணைந்த புதிய சர்வதேச முனையம் திறப்புப் பணியில், அதிகாரிகள் தீவிரமாக இருந்ததால், இந்தப் பணி உடனடியாக தொடங்கவில்லை. இந்த நிலையில் தற்போது, இந்திய விமான நிலைய ஆணையம், டெல்லியை தலைமை இடமாக இயங்கிக் கொண்டு இருக்கும், சவுரியா ஏரோநாட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து உள்ளது.