சென்னை: கடந்த மார்ச் 20ஆம் தேதி 2023-24ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகைக்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தது சர்ச்சையை எழுப்பியது.
இதனால் கடந்த ஒரு வார காலமாக எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மகளிர் உரிமைத்தொகை குறித்து கடுமையாக விமர்சித்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் குறித்து கடும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத்தொகை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், ''மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நூற்றாண்டில் மகத்தான திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக மாற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அறிவிக்கப்படாத வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய், மனைவி, சகோதரி என ஆணுக்குப் பின்னால் பெண் இருக்கிறார். பெண்களை கருத்தில்கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. Universal basic Income என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.