சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் இட்டை பிள்ளையார் கோயில் தெருவில், சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது கத்திரி வெயில் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்தப் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
மேலும் பம்மல் நகராட்சி சார்பில் வாரம் ஒரு முறை, ஒரு குடும்பத்திற்கு 10 குடங்கள் மட்டுமே தண்ணீர் வழங்கபட்டு வருகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை என்று அப்பகுதி மக்கள், பலமுறை நகராட்சி அலுவளர்களிடம் புகார் தெரிவித்தும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், தங்களது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காத பம்மல் நகராட்சி அலுவலர்களைக் கண்டித்தும், கூடுதலாக 10 குடங்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முகக்கவசம் அணிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த சங்கர் நகர் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதலாக 10 குடங்கள் தண்ணீர் வழங்குவதற்கான வழிவகைகளை செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள், தங்களது போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர்.