சென்னை: தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப் 15ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த திட்டதிற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பம் விநியோகம், பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் ஜூலை 26ஆம் தேதி வரை மூன்று நாட்கள் விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் உள்ள ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக விண்ணப்பதிவு முகாம் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 14 வரை இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த முகாமில், 1,428 நியாய விலைக் கடைகளில் முதற்கட்டமாக 704 நியாய விலைக் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் 1,730 சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்றன.
அதில், முதற்கட்ட முகாமிற்கு உட்பட்ட பகுதிகளில் 6,32,637 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்ட முகாமிற்கு உட்பட்ட பகுதிகளில் 6,18,045 விண்ணப்பங்களும் என மொத்தம் 12,50,682 விண்ணப்பங்கள் நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், வழங்கபட்ட விண்ணப்பங்கள் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 9.08 லட்சம் விண்ணபங்கள் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவித்தது, "இம்முகாம்களில் 1,428 முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை கண்காணித்தனர். 1,428 உதவி தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு முகாமுக்கு வருகை புரியும் குடும்பத் தலைவிகளுக்கு விண்ணப்பத்தில் உள்ள ஐயங்களை களைந்து சிறப்புற பதிவு செய்ய உதவி புரிந்தனர். மேலும் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர்கள் என்ற கணக்கில் 3,511 விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு செய்தனர்.
காவல்துறை சார்பில் 3,030 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 325 நகரும் குழுக்கள் அமைக்கப்பட்டு விண்ணப்ப முகாம்களில் கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணம் கண்காணித்து கொள்ளப்பட்டது. முதற்கட்ட சிறப்பு முகாம்களின் மூலமாக 04.08.2023 வரை 4,70,301 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்டம் மூலமாக 14.08.2023 வரை 4,38,079 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தம் இரு கட்டங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலமாக 9,08,380 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 1,428 நியாய விலைக் கடைகளிலும் முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும்,இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டுப்பாட்டு அறையின் 044-25619208 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்". என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூய்மை பணியாளராக மாறிய சென்னை மாநகராட்சி ஆணையர்... பொது மக்களுக்கு விழிப்புணர்வு!