சென்னை:விளையாட்டுத்துறையில் ஆண்கள் சாதித்த காலம் மாறி தற்போது அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். அதற்கு சான்றாக அமைந்துள்ளார், சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா கணேஷ். வெற்றி என்பது எதிலும் எளிதாக கிடைப்பதில்லை, அதை நானும் அடையாமல் ஓய்வதில்லை என்று சாதிக்க துடிக்கும் இந்த இளம்பெண் தேர்ந்தெடுத்துள்ள பாதையோ நம்மை பிரம்மிக்க வைக்கிறது. ஹாக்கி, வாலிபால், கபடி, கோ-கோ, டென்னிஸ், பேட்மிண்டன் என எத்தனையோ விளையாட்டுகள் இருப்பினும், ஐஸ்வர்யா விரும்பி தேர்வு செய்தது 'பாய்மர படகு போட்டி' ஆகும்.
பாய்மர படகு போட்டி:பாய்மர படகு போட்டி என்பது காற்று, கடல் அலைகளின் நடுவே வீசும் காற்றின் விசைகளுக்கு ஏற்ப, அவற்றைக் கட்டுப்படுத்தி படகை குறிப்பிட்ட திசை நோக்கி ஓட்டப்பந்தய வழியில் சிறப்பாக செலுத்துவதேயாகும். அதன்படி இலக்கை அடைபவரே வெற்றி பெறுவார். இந்த போட்டி ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒன்றாக உள்ளது.
விளையாட்டு மீதான ஆர்வம்: சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா கணேஷ் வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், கராத்தே, குதிரை சவாரி எனப் பல போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்று உள்ளார். செய்தித்தாள்கள் மூலம் பாய்மர படகு போட்டி குறித்து தெரிந்து கொண்ட இவர், அப்போட்டிக்கான தனது பயிற்சியை தொடங்கி உள்ளார்.
இது தொடர்பாக நம்மிடையே பேசிய அவர், '2014 ஆம் ஆண்டு முதல் இந்த பாய்மர படகு போட்டியில்பங்கேற்க தொடங்கினேன். கடந்த 2015 தெலுங்கானாவில் நடைபெற்ற அதே போட்டியில் முதல் தங்கம் வென்றேன். சிறு வயது முதல் நான் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பேன். செய்தித்தாளில் இந்த பாய்மரகு போட்டி குறித்து செய்தி வந்தது. எனவே, அந்த போட்டி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக இதற்காக பயிற்சி எடுக்க தொடங்விட்டேன். தற்போது 7 முதல் 8 வருடங்களாக, இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகிறேன்.
கூகுள், யூடியூப் துணை: இப்படி போட்டிருக்கிறது என்று பல நபர்களுக்கு தெரியாமல் உள்ளது. எனக்கும் முதலில் தெரியாமல் இருந்தது, அதற்கு பிறகுதான் இந்த போட்டியை பற்றி தெரிந்து கொண்டேன். கோவளத்தில் இதற்கு பயிற்சி அளிக்க இடம் இருக்கிறது. அங்கு இப்போட்டிக்கான அடிப்படைகளை கற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகு, கூகுள் மற்றும் யூடியூப் உதவியுடன் நான் இந்த போட்டியை முழுமையாக கற்றுக் கொண்டேன். தேசிய அளவில் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், கோவா அல்லது மும்பைக்கு தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இந்த போட்டிக்கு மட்டும் அங்கே சென்று விளையாடுகிறேன். சென்னை துறைமுகத்தில் என் பயிற்சியை மேற்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கான படகுகள்:இந்த பாய்மர படகு போட்டியில் கலந்துகொள்ள தரமான படகு என்பது இன்றியமையாதது ஆகும். எனவே, இதற்காக ஐஸ்வர்யா முதலில் பயற்சியின் போது ரூ.1.5 லட்சம் விலை கொண்ட படகை பயன்படுத்தியுள்ளார். அதற்கு பிறகு போட்டிகளுக்கு செல்வதற்கு 4 முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான படகை பயன்படுத்தி வருகிறார். நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த வீராங்கனை ஐஸ்வர்யாக்கு இந்த படகுகளின் விலை அதிகம் என்றபோதிலும், அதனை பெறுவதற்கும் பல தடைகளைத் தாண்டி தற்போது சாதித்து வருகிறார். இதற்காக, தனது குடும்பமும் தனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர் என ஐஸ்வர்யா தெரிவிக்கிறார்.