சென்னை: கும்மிடிபூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவன பயிற்சி மையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், புதிய பணிமனைக்கு இடம் தேர்வு செய்தல் ஆகியவற்றைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று(ஜூலை.13) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டையஸ், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுகையில், " அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் நடைமுறையானது அமலுக்கு வந்தபோது, பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 6,000 லிருந்து 7,291 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் எண்ணிக்கையை அறிந்து கொள்ளவே, கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படுகிறது. இதே போன்று மாற்றுத் திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள், திருநங்கையர்கள் ஆகியோர்களுக்கும் கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படுகிறது.
பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,650 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில், மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழக 2,800 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.