மனமுடைந்து மலேசிய பெண் வெளியிட்ட வீடியோ சென்னை: மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண், திருப்பதி, திருத்தணி கோயில்களில் தரிசனம் செய்வதற்காக மலேசியாவில் இருந்து அவரது கணவருடன் தமிழ்நாடு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தம்பதியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பெண்மணி தங்க தாலி சங்கிலி, அவரது கணவர் கழுத்தில் செயினும் கையில் காப்பும் அணிந்திருந்துள்ளனர்.
இருவரும் அணிந்திருந்த நகைகளை வெளியில் எடுத்து தரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்பொழுது அவரது கணவர் மட்டும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் கையில் அணிந்திருந்த காப்பை கழட்டி கொடுத்துள்ளார். அந்தப் பெண்மணியும் கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலியை எடுத்து காட்டும்படி சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். உடனே அந்தப் பெண்மணி என்னுடைய தாலிச் சங்கிலியை என்னால் எடுத்து வெளியில் காட்ட முடியாது என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், “மலேசியாவில் இருந்து சென்னைக்கு வருவதற்கு ஒருவர் எத்தனை கிராம் நகை அணிந்து வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் தெரியாமல் நகையை அணிந்து வந்து விட்டோம். இதற்கு என்ன பெனால்டி கட்ட வேண்டும் என கேட்டோம்.
அதற்கு எங்களை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காக்க வைத்தனர். அது மட்டும் இன்றி எங்களை நாயை நடத்துவது போல் நடத்தினர். என்னுடைய கணவர் நகையை அவர்கள் எடுத்துக் கொண்டனர் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கெஞ்சி கதறினோம்.
எங்களிடம் வெளிநாட்டில் இருந்து சென்னை வருபவர்கள் 20 கிராம் மட்டுமே கொண்டு வருவதற்கு அனுமதி உண்டு என தெரிவித்தனர். ஆனால் நாங்கள் இருக்கும் போதே மற்றொரு பயணியிடம் 10 கிராம் நகை மட்டுமே கொண்டு வர அனுமதி உண்டு எனக் கூறினர்.
வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகள் எவ்வளவு நகை தான் கொண்டு வர வேண்டும் என தெரியாத சூழ்நிலையில் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். எங்களது நகையை வாங்கி வைத்துக் கொண்டு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.
நாங்கள் மலேசியாவில் இருந்து திருப்பதி மற்றும் திருத்தணி கோவிலுக்கு செல்வதற்காக மட்டுமே வந்ததாக கூறினோம். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கு விசாரணை செய்தனர். எங்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதால் எங்களால் அன்று திருப்பதிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு சாமி கும்பிட வந்த போது சென்னை விமானத்தில் பல மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் செயல்பட்டது வருத்தம் அளிக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சென்னைக்கு வரும்போது இதே நகைகளை தான் நாங்கள் அணிந்து வந்தொம்.
அப்பொழுது சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நகை குறித்து எந்த கேள்வி கேட்கவில்லை, இப்பொழுது ஏன் கேட்கின்றார்கள் என தெரியவில்லை. வழக்கமாக அணிந்து கொண்டிருக்கும் நகைகளை தான் போட்டு கொண்டு வந்திருந்தோம். எங்களுடைய நகைகளை வாங்கிக் கொண்டு அதற்கு பெனால்ட்டியாக முதலில் ஏழு லட்சம் எழுதியதாகவும் அதன் பிறகு அதை 5 லட்சமாக மாற்றி எழுதினர்.
10 கிராம் நகை தான் போட்டு வர வேண்டும் என்று இருந்தால் அதை முதலில் சொல்லியிருந்தால் நாங்கள் அதை சென்னைக்கு போட்டு கொண்டு வந்திருக்க மாட்டோம். நாங்கள் தாலி சங்கிலி போடாமல் மஞ்ச கயிற்றில் தாலி மட்டும் போட்டால் 10 கிராம் குறைவாக தாலி போட முடியாது. வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தால் தாலியை கழட்டி வைத்துவிட்டு தான் வர வேண்டுமா?” எனக் கூறி வேதனையோடு அவர் வெளியிட்டிருந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.
ஆனால் இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் பயணிகளிடம் சட்டப்படி நடந்து கொண்டதாகவும், விதிகளை மீறி நகைகளை கொண்டு வந்ததால் திரும்ப மலேசியா செல்லும்பொழுது நகைகளை வாங்கிக் கொள்ளவும் தெரிவித்ததாக சுங்கத்துறை அதிகாரி தரப்பில் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மதுபானம் உரிமம் விதி திருத்தம்: சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதா? - விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு