சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, விசாகன் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். விசாகனின் தந்தை வணங்காமுடி அபெக்ஸ் லேபரட்டரி என்ற பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரர் முரளி ஸ்ரீனிவாசன். இவர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் முரளி சீனிவாசனின் இரண்டாவது மனைவி எனக் கூறி சத்தியபாமா என்ற பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ஸ்ரீனிவாசனின் இரண்டாவது மனைவியாக யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும், தனக்கும் சீனிவாசனுக்கும் எட்டு மாத குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கணவனை மீட்கக்கோரி புகார்
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் கணவர் உடல்நிலை சரியில்லாமல் ஹைதராபாத்திற்கு சிகிச்சை பெற சென்றதாகவும், தற்போது தனது கணவரின் உடல்நிலை பற்றியும், அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும், இதனால் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகர் ரஜினிகாந்தின் சம்பந்தியுமான வணங்காமுடியிடம் தான் விசாரித்ததாகவும், அப்போது வணங்காமுடி தனக்கு உதவி செய்வதாக கூறியதாகவும், அதேநேரத்தில் தனது கணவரின் முதல் மனைவியின் வீட்டுக்கு சென்றபோது அவர் தன்னை அடித்து விரட்டிய தாகவும் கூறியுள்ளார்.