சென்னை:மாதாவரம் பெரிய மாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால், நாகராணி தம்பதியின் மகன் விஜய் (17). கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜமங்கலம் காவல் துறையினர் பொய் வழக்கில் விஜய்யை கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
கைதான விஜய் 15 நாள்கள் காவலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் கைது சம்பவம் விஜய்யை மனதளவில் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பிணையில் வெளிவந்த விஜய் கடந்த இரண்டு நாட்களாக தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார்.
அதோடு நிற்காமல் நேற்று (ஜூலை.6) தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். விஜய்யின் நிலை கண்டு பொறுக்காத நாகராணி (47), மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டி தலைமை செயலகத்தின் வாயிலில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட கோட்டை காவலர்கள் நாகராணியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள பி1 காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் தலைமை செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மெரினாவில் கத்தியுடன் பொதுமக்களை தாக்க முற்பட்ட நபரிடன் காவல் துறையினர் விசாரணை