சென்னை: மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பெண் பயணி, சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா நாட்டிற்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்திருந்தார். இதை அடுத்து அந்தப் பயணியின் உடமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அந்தப் பெண் பயணி இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்திருந்தார். அவர் கொண்டு வந்திருந்த கூடைகளை அதிகாரிகள் திறந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரண்டு கூடைகளுக்குள்ளும் சிறியதும் பெரியதுமாக, உயிருடன் இருந்த 23 பாம்புகள் நெளிந்து கொண்டு இருந்தன. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அலறி அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினார்கள்.
ஆனாலும் சில துணிச்சலான அதிகாரிகளும், சுங்கத்துறை சிப்பாய்களும் சேர்ந்து கொண்டு, அந்தப் பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர். அவர் மிகவும் அலட்சியமாக, இவைகள் எல்லா உயிரினங்களையும் போல, ஒரு உயிரினங்கள். இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார். ஆனால் சுங்க அதிகாரிகள், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, இதைப் போன்ற உயிரினங்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு, சர்வதேச வன உயிரின பாதுகாப்பு பிரிவின் அனுமதி வாங்க வேண்டும்.
அது மட்டும் இன்றி இந்திய வன உயிரின பாதுகாப்பு பிரிவின் அனுமதியும் வாங்க வேண்டும். மேலும் இதைப் போன்ற விலங்குகளை இந்தியாவுக்குள் எடுத்து வருவதற்கான காரணங்களும் குறிப்பிட வேண்டும் என்று எடுத்துக் கூறி, அதற்கான ஆவணங்கள் எங்கே என்று கேட்டனர். ஆனால் அந்த பெண் பயணி, எந்தவித ஆவணமும் இல்லை என்று அலட்சியமாகப் பேசினார்.