சென்னை ஆயிரம் விளக்கு ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த புதனன்று (ஜன. 24) நகை வாங்க வந்த பெண் ஒருவர் தங்க கொலுசு ஒன்றை திருடிச் சென்றுவிட்டதாக நகைக்கடை நிர்வாகம் சார்பாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அந்தப் பெண் முகக்கவசம் அணிந்து இருந்ததாலும், சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லாததாலும் சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதனால் குழம்பிய காவல் துறையினருக்கு அக்கடையில் கரோனா காரணமாகப் பொருத்தப்பட்ட நவீன தெர்மல் ஸ்கேனர் உதவியது.
வெப்ப பரிசோதனையின்போது அந்தப் பெண் தனது முகக்கவசத்தை அகற்றியுள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த உடனேயே காவல் துறையினருக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. இந்தப் பெண் பல்வேறு நகைக்கடைகளில் கவனத்தை திசைத் திருப்பி கொள்ளை அடிப்பதில் தேர்ந்த பெண் தாட்சாயனி என்பதைக் கண்டுபிடித்தனர்.
உடனடியாக கடையில் கொடுத்த முகவரியில் சென்று பார்த்தபோது அந்த வீட்டிலிருந்து அண்மையில்தான் காலி செய்து வேறு ஒரு இடத்திற்குச் சென்றதாக கூறியுள்ளனர். தொடர்ந்து இவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள சூளைமேடு சைதாப்பேட்டை நசரத்பேட்டை, யானைகவுனி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர் எங்கெல்லாம் வசித்துவந்தார் என்பது குறித்து தேடும்போது பல தகவல்கள் தெரியவந்தன.
நகைக்கடையில் திருடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அந்தப் பகுதிக்கு வீடு வாடகைக்குச் செல்லும் தாட்சாயனி, நகைக் கடையில் திருடிய உடனேயே வீட்டை காலிசெய்து வேறு ஒரு இடத்திற்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த காவல் துறையினர் அவர் கடைசியாக எங்கெல்லாம் வீடு எடுத்திருந்தார், அங்கு யாருடன் பழக்கத்தில் இருந்தார் என்பது குறித்த தகவலைச் சேகரித்தனர்.
தற்போது பொழிச்சலூரில் குடும்பத்துடன் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று தாட்சாயனியை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 34 சவரன் நகையை மீட்டனர்.
இதையும் படிங்க:பெண்கள் கழிவறையில் சிசிடிவி கேமரா: தனியார் நிறுவன உரிமையாளர் கைது