சென்னை: துரைப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், விநியோகம் செய்யும் போது ஊழியர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகச் சென்னை காவல்துறையை இணைத்துப் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கடந்த 3 ஆம் தேதி தனது நண்பர் பிக் பேஸ்கட் என்ற வலைத்தளம் மூலமாக வீட்டிற்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்ததாகவும், ஆர்டர் செய்த பொருட்களைக் கடந்த 5 ஆம் தேதி டெலிவரி ஊழியர் ஒருவர் தனது வீட்டிற்கு டெலிவரி செய்ய எடுத்து வந்ததாகவும், அப்போது தான் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் டெலிவரி ஊழியரிடம் பொருட்களை ஹாலில் உள்ள சேரில் வைத்துவிட்டுச் செல்லுமாறு கூறியதாகவும், ஆனால் வீட்டில் தான் மட்டும் இருப்பதை அறிந்த அந்த ஊழியர் அத்துமீறி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அச்சமடைந்து சமையலறையில் ஓடி ஒளிந்து வெளியே செல்லுமாறு அந்த ஊழியரைப் பல முறை அறிவுறுத்திய போதும், அவர் கேட்காமல் தனது வீட்டின் கதவை மூடி அத்துமீற முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் கூச்சலிட்ட போது, அந்த ஊழியர் தனது செல்போன் எண்ணைக் கேட்டு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் தான் போலீசிடம் போன் செய்யப் போவதாக கூறிய போதும் அந்த ஊழியர் கேட்காமல் தொந்தரவு கொடுத்து வந்த போது, தனது கூச்சல் சத்தம் கேட்டு வீட்டருகே இருந்த நண்பர் வந்ததால் அந்த ஊழியர் வீட்டை விட்டு வெளியே சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாகக் குறிப்பிட்ட டெலிவரி நிறுவனத்தின் அதிகாரிகளுக்குத் தொடர்பு கொண்டு நடந்த விஷயம் பற்றித் தெரிவித்ததற்கு, உடனடியாக அந்த டெலிவரி ஊழியரைப் பணி நீக்கம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர். போலீஸில் புகார் அளிக்க ஊழியரின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை அவர்களிடம் கேட்ட போது வெறும் ஊழியரின் பெயர் மட்டுமே கொடுத்து சரியாகப் பதிலளிக்க மறுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.