சென்னை குரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து சென்று கொண்டிருந்த பெண் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மார்ச் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குரோம்பேட்டை 26ஆவது வார்டு காந்தி நகரில் சில நாள்களுக்கு முன்பு தேன்மொழி என்னும் 55 வயது மதிக்கத்தக்க பெண் மகன் உடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் இருசக்கர வாகனத்தை அங்கிருந்த தெரு நாய்கள் விரட்டி உள்ளன.
இதனால் தேன்மொழியின் மகன் வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தேன்மொழி தவறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு குவிந்த குடியிருப்பு வாசிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை, எப்போதும் இல்லாத அளவிற்கு பெருகி விட்டது. ஒவ்வொரு தெருவிலும், குறைந்த பட்சம் 10 முதல் 15 நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி கடிப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நாய்கள் விரட்டும் போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைகின்றனர். பள்ளிக் குழந்தைகளும் தனியாக நடந்து செல்ல முடிவதில்லை.