சென்னைமணலி புதுநகர் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர், பவானி(29). இவர் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் (32) என்பவரை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மெக்காட்டிக்பேரஸ் (3) நோயல்கிறிஸ்(1) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் பாக்கியராஜ் தனியார் நிறுவனத்திலும், பவானி கந்தன்சாவடியில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பவானி அடிமையாகியுள்ளார். இதனால், பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதுகுறித்து, பவானியின் கணவர் மற்றும் பவானியின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் பவானியை கண்டித்துள்ளனர். இருந்தாலும், பவானி தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் உச்சகட்டமாக, தனது 20 சவரன் நகையை விற்று அதில் வந்த பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
இதில் பணத்தை இழந்த பவானி, தனது இரு தங்கைகளிடம் இருந்து தலா 1.5 லட்சம் ரூபாய் வீதம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, ரம்மி விளையாடியுள்ளார். அதிலும் பணத்தை இழந்த பவானி, மன உளைச்சலில் இருந்துள்ளார். தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனது தங்கை ஒருவரிடம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் பணத்தை இழந்ததைப் பற்றி தெரிவித்துள்ளார்.