சென்னை, சேத்துபட்டில் போக்குவரத்துக் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவமரியாதையாகப் பேசிய பெண் வழக்கறிஞர், அவரது மகள் ஆகியோர் மீது காவல் துறையினர் ஆறு பிரிவுகளின் கீழ் முன்னதாக வழக்குப் பதிவு செய்தனர்.
இச்சூழலில் தாய், மகள் இருவரும் முன் பிணை கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் பிணை கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (ஜூன்.15) விசாரணைக்கு வந்தது.
அப்போது மருத்துவர்கள் காவல் துறையினர் என முன்களப் பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருவதாகவும், அனைவரும் ஊரடங்கு நேரத்தில் கரோனா பயத்தில் இருக்கும்போது வழக்கறிஞருக்கு அங்கு என்ன வேலை என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
”முன் பிணை அளித்தால் அரசு மருத்துவமனைக்கு நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய் தரமுடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் தமிழ்நாடு பார் கவுன்சிலை பிரதிவாதியாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, வரம்பு மீறிய வழக்கறிஞர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை மறுதினம் (ஜூன்.17) ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பதிவேற்ற கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!