“இந்தியாவின் வரலாறு தென்னகத்தில் இருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அது ஏனோ நடக்காமல் போய்விட்டது” வரலாற்று ஆய்வறிஞர் வின்சென்ட் ஸ்மித் கூறிய சொற்கள்தாம் இவை.
அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்” எனப் பேரவையில் முழங்கியிருக்கிறார்.
‘கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி’ என்ற சொற்றொடர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணம் ஆகிவருகிறது.
எகிப்து, மொகஞ்சதாரோ, மெசபடோமியா, சிந்து சமவெளி நாகரிகங்கள்போல் பொருநை நாகரிகமும் ஒன்று.
பொதுவாக ஆதி மக்கள் தங்களது வாழ்விடங்களை ஆற்றங்கரையோரம் அமைத்துக்கொண்டனர். அப்படி தற்போது தாமிரபரணி என்ற பெயரில் அழைக்கப்படும் பொருநை ஆற்றங்கரையில் உருவானது பொருநை நாகரிகம்.
தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகள் பொருநை நாகரிகம் ஆகும்.
ஆதி நாகரிகம் ஆதிச்சநல்லூர்
தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்படும் இடங்களில் ஆதிச்சநல்லூர் முதன்மையானது. 1876ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்டூவர்ட்டும், ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான விஷயங்கள் இருக்கின்றன என்பதை முதன்முதலில் கண்டறிந்த எஃப் ஐகோர் என்பவரும் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு 1904ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா என்பவர் ஆய்வுகள் மேற்கொண்டார். அலெக்ஸ்சாண்டருக்குப் பிறகு யாரும் ஆதிச்சநல்லூரை கண்டுகொள்ளாத சூழலில், 2004ஆம் ஆண்டு காலகட்டத்தில் சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த சத்யமூர்த்தி தலைமையிலான குழு ஆய்வுசெய்தது.
அதில், மூன்று அடுக்குகள் கொண்ட முதுமக்கள் தாழிகளும், எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன. அதனை வைத்தும், எலும்புக்கூடுகளை வைத்தும் இவை இன்றிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முந்தையவை எனத் தெரியவந்தது. அதேசமயம் இந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை இந்திய தொல்லியல் துறை வெளியிடாமல் இருந்த நிலையில் சமீபத்தில்தான் இதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது.
சிவகளை ஆராய்ச்சி
ஆதிச்சநல்லூரை ஒட்டியுள்ள சிவகளையிலும் தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டது. அங்கு, 40 முதுமக்கள் தாழிகளும், கறுப்பு சிவப்பு பானைகளும் கண்டெடுக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, அங்கு கண்டெடுத்த நெல் மணி ஒன்றை அமெரிக்காவின் புகழ்பெற்ற Beta Analytical Laboratoryஇல் வைத்து சோதித்தபோது அதன் காலம் கி.மு. 1155 எனத் தெரியவந்தது. ஆகமொத்தம் ஏறத்தாழ தமிழ் நாகரிகம் இன்றிலிருந்து 3200 ஆண்டுகள் (இது குறைந்தபட்ச அளவுதான்) பழமையானது என உறுதியாகியுள்ளது.
அதேபோல், அங்கு கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் ஆதன் என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதன் மூலம் சிவகளை மக்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே எழுத்தறிவுடன் இருந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. மேலும், நீர் மேலாண்மையைக் கையாளும் வகையில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சுடுமணல் குழாய்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கிடையே கங்கை சமவெளி நாகரிகத்திற்கும் கீழடி நாகரிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அதன்படி, கங்கை சமவெளி நாகரிகத்தில் கிடைத்த பானை போன்று, வைகை சமவெளியிலும் கிடைத்திருக்கிறது. அதனால், கங்கை சமவெளி நாகரிகத்தை ஒட்டிய நாகரிகமோ அல்லது மூத்த நாகரிகமாகவோ தமிழ் நாகரிகம் விளங்குகிறது.