சென்னை:ரயில் மூலம் வெளி மாநிலங்களிலிருந்து சட்ட விரோதமாக மது, கஞ்சா, ஹவாலா பணம் உள்ளிட்டவை பெருமளவில் கடத்தப்பட்டு வருவதாக நாளுக்கு நாள் குற்றச்செய்தி அதிகரித்து வருகிறது. எனவே, இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து ரயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (மே 27) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ரயிலில் இருந்து இறங்கி வந்த நான்கு பேர், சந்தேகத்திற்கு இடமளிப்பது போல் நடந்து கொண்டுள்ளனர். எனவே, சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களைப் பிடித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்களிடம் நான்கு பைகளில் ஒரு கோடியே 58 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனால் சந்தேகம் மேலும் அதிகரிக்கவே, அவர்களிடம் பணத்திற்கு உண்டான ஆவணங்களை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அந்த நான்கு பேரும் பணம் குறித்து முறையான விளக்கம் அளிக்கவில்லை. அதனை அடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:சென்னையில் கொடிகட்டி பறக்கும் ஹவாலா பிஸ்னஸ்.. ரூ.3.37 கோடி பணம் சிக்கியது எப்படி?
விசாரணையில் பணத்தைக் கொண்டு வந்த நபர்கள் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது முதாசீர் குரேஷி( 36), ஓலா குண்டா நியாஸ் அகமது(45), பைக் இம்ரான்( 22), அப்துல் ரஹீம் (32) என தெரிய வந்தது. மேலும், தொடர் விசாரணையில் ஒருவர் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் சொந்தமாகத் துணி கடை வைத்து இருப்பதாகவும் மற்றும் துணி வாங்குவதற்காகப் பணத்துடன் சென்னை வந்ததாகவும், மற்றொருவர் தங்கம் வாங்க வந்ததாகவும் என மாறி மாறி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் இதுகுறித்து வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தகவலின் பேரில் விரைந்து வந்த வருமான வரித்துறையிடம், ரயில்வே போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நான்கு பேரையும் ஒப்படைத்தனர். எதற்காக இவ்வளவு பணம் கொண்டு வந்தனர்? என்றும் ஹவாலா பணத்தைக் கைமாற்றுதல் தொழிலில் இவர்கள் ஈடுபட்டுள்ளாரா? எனவும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:'தானா சேர்ந்த கூட்டம்' பட பானியில் மத போதகர் வீட்டில் போலி வருமான வரித்துறையினர்; வேஷம் கலைந்தது எப்படி?