சென்னை:பல்லாவரம் அடுத்த பம்மல் கட்டபொம்மன் தெருவில் வசித்து வருபவர், ராஜகுமார் ராஜ் (30). இவருடைய ஒரே மகனான அங்குஸ் குமார்(4) வீட்டின் வெளியே நேற்று மாலை விளையாடிக் கொண்டிருக்கும்போது காணாமல் போனார்.
இது தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில், சிறுவன் காணாமல் போன இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மீட்கப்பட்ட 4 வயது சிறுவன் இந்நிலையில், பல்லாவரம் துணை காவல் ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன், காணாமல்போன சிறுவனின் புகைப்படத்தை 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி, சிறுவனைப் பார்த்தால் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகு சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பிய சிறுவன் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்த காவலர்கள் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பல்லாவரம் உதவி ஆணையாளரின் துரித நடவடிக்கையால், காணாமல் போன குழந்தை ஐந்து மணி நேரத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:கோடநாடு வழக்கு; எடப்பாடி, சசிகலாவை விசாரிக்கக் கோரி புதிய மனு