இந்திய பாதுகாப்புத் துறை தொழில்நுட்ப வளர்ச்சியால் நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக்கொண்டே வருகிறது. இதன்மூலம் எல்லைப் பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு , நீர்வழிப் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுவருகிறது.
இவற்றுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வெளிநாடுகளில் வாங்கிய நிலை மாறி மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் கல்லூரி மாணவர்களைக்கொண்டு ராணுவ தளவாடங்களைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
தஞ்சையைச் சேர்ந்த ஜெயக்குமார் 28 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்திற்கான 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை நடத்திவருகிறார். இதன்மூலம் பல்வேறு கருவிகளை உற்பத்திசெய்து பாதுகாப்புத் துறைக்கு வழங்கிவருகிறார்.
இது குறித்து ஜெயக்குமார் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
புதிய ராணுவ தளவாடங்களை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் தளவாடங்களை பாதுகாப்பது என்ற நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தளவாடங்கள் வாங்கிய நிலைமாறி 'மேக் இன் இந்தியா' எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் நமக்கு தேவையான கருவிகளை நமது நாட்டிலேயே தயாரிக்க முடிகிறது. நான் பணியிலிருந்தபோது மாணவர்கள், பேராசிரியர்கள், விமானப்படை நண்பர்கள் உதவியுடன் பயிற்சி ஏவுகணை தொழில்நுட்ப கருவியை ஒரு வருடத்தில் தயாரித்து வழங்கினோம்.
இதன்மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஒரு சிறிய ரக ஏவுகணையையே உருவாக்க முடியும். பணி ஓய்வுக்குப் பிறகு என்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டு என்னுடைய 'என்ரூட்' நிறுவனம் மூலம் தளவாட சாதனங்களைத் தயாரிக்கிறோம்.