கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடி அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைசெய்தனர்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வுமேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்தது, அவர்களுக்கு உதவியது தொடர்பாக பெங்களூரு, காஞ்சிபுரம், சேலம் ஆகிய இடங்களிலிருந்து பத்து பேரை சென்னை கியூ பிரிவு காவல் துறையினர்கைதுசெய்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெங்களூருவில் பதுங்கியிருந்த, கன்னியாகுமரி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொலை செய்த பயங்கரவாதி அப்துல் சமீம், தவுஃபிக் ஆகியோரை பெங்களூருவில் வைத்து பெங்களூரு சிறப்பு படை காவல் துறையினர் கைதுசெய்தனர். அதன்பின், இவர்களை கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் கைதுசெய்து அழைத்துவந்து கடந்த 20 நாள்களுக்கும் மேல் விசாரணை நடத்திவந்தனர்.