திமுக திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஆவடி, கோணாம்பேடு பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொங்கலிட்டார். தொடர்ந்து சமத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக கிறிஸ்துவம், இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தோர் பொங்கலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், "பொங்கல் விழாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடுகின்றனர். அதனால்தான் சாதி, மதங்களைக் கடந்து நாம் சமத்துவப் பொங்கல் கொண்டாடுகிறோம். தை முதல் நாள் தான் தமிழர்களுக்கு புத்தாண்டு. அதைத்தான் அரசாணையாக வெளியிட்டு கொண்டாடி வருகிறோம்.
கோயிலுக்கு எதிரே நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், நம்மை ஏதோ கோயில்களுக்கு எதிரி போல் பேசுகிறார்கள். கருணாநிதி 'கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது'என்பார். அந்த கொடியவர்களுக்கு எதிராகத்தான் போராடுகிறோம். எனது துணைவியார் போகாத கோயில்களே இல்லை. கழக உடன்பிறப்புகள் கூட சந்தனம் இட்டுள்ளார்கள். நான் பக்தியை குறை சொல்ல வில்லை. அது அவர்கள் விருப்பம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே அண்ணாவின் வழி. அவர் வழியில் நடப்போம். அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கொடுமையானது.