கோவிட்-19 ஊரடங்கு உத்தரவால் வேலை வாய்ப்புகளின்றி வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென தமிழ்நாடு சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் இயக்குநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு-குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள், திரையரங்கம் என அனைத்துவிதமான தொழில் நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, தகுந்த இடைவெளியைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வெளியே வருவதும், பயணப்படுவதும் முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் தனியார் கார் நிறுவனங்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வேலைவாய்ப்புகளின்றி இருக்கும் இந்த கார்களின் உரிமையாளர்களும், கார் ஓட்டுநர்களும் தற்போதைய சூழலில் கடனும் வாங்க முடியாது நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி உள்ளனர்.