சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் என்பது தேர்தல் நேரத்தில் தொடங்கி உட்கட்சி தேர்தல் நடக்கும் வரை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. 2019ஆம் ஆண்டு கே.எஸ். அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியினை ஏற்றுக்கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டவுடன் திமுக கூட்டணியில் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து 18 இடங்களில் வெற்றிபெற்றது.
தேர்தலுக்குப் பிறகும் பல கோஷ்டி மோதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுள்ளது. அந்தவகையில் கடந்த 15ஆம் தேதி திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவரை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் கலவரமாக முடிந்தது. இந்த கலவரம் தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை இரண்டாகப் பிரித்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் இந்திரா காந்தியின் 105-ஆவது பிறந்த நாளன்று, தனியாக சென்று இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தனர். இது மோதலை இன்னும் பெரிதாக்கியது.
மேலும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி. தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கடந்த 20-ம் தேதி டெல்லி சென்று,15-ம் தேதி நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர். இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் பேசியபோது, ’தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் வெற்றிபெறுவதில் அனைவரின் கவனம் உள்ளது. அதன் பிறகே ராகுல் காந்தியுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார்கள். இப்போதைக்கு தமிழ்நாட்டில் நடந்துவரும் உள்கட்சி விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு இல்லை’ எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிறந்தநாளையொட்டி "தம்பி வா தலைமையேற்க வா" என்ற அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினர். அதுமட்டுமின்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கினால் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன், என அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். இந்நிலையில் அடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடைபெறும் என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
இதையும் படஙக்: தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்