திமுக பொதுக்குழுக்கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதால் முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழுவாக கருதப்பட்டது. பொதுக்குழுவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, 'சட்டப்பேரவைத் தேர்தலில் வருகிறது. இளைஞர் அணியையும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்' எனப் பேசினார்.
மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உதயநிதியையும், இளைஞர் அணியையும் முன்னிறுத்திப் பேசினார். கடந்த ஒரு வருடமாக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் கை திமுகவில் ஓங்கியிருப்பதை மறுக்கமுடியாது. குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்குமார் இளைஞர் அணியில் இருந்தவரே.
தற்போது, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்வாகியுள்ள சிற்றரசு, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டது, மத்திய திருச்சி மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷ் போன்றவர்கள் திமுக இளைஞர் அணியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவில் இளைஞர் அணி கை ஓங்குமா இதுபோன்று தொடர்ந்து திமுக இளைஞர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தலாக வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இளைஞர் அணிச் செயலாளர் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான களப்பணிகளை கடந்த ஒரு வருடமாக உதயநிதி ஸ்டாலின் செய்துவருகிறார்.
திமுக இளைஞர் அணி சார்பாக பொய்ப் பெட்டி நிகழ்ச்சி, கரோனா காலத்தில் ஆய்வுக்கூட்டம் உள்ளிட்டவைகள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடி சாத்தான்குளம் விவகாரம் தொடங்கி, மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டது வரை முதல் ஆளாக நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறிவருகிறார். தன்னை மக்கள் மத்தியில் முன்னிலைப் படுத்த கொள்வதற்கு தொடர்ந்து பல்வேறு பணிகளைச் செய்துவருகிறார்.
உதயநிதி மட்டுமின்றி அவர் ஆதரவு தரும் நபர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய ஊடகவியலாளர் ராதாகிருஷ்ணன், "திமுக தலைவர் ஸ்டாலின் எந்த அளவு உதயநிதி ஸ்டாலினை அனுமதிக்கிறாரோ அந்தளவுதான் கட்சியில் அவருடைய தாக்கம் இருக்கும். மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்வது மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இளைஞர்களுக்கு எந்தளவு சீட் கொடுக்கப்படுவது போன்றவற்றைப் பார்த்தால் உதயநிதியின் தாக்கம் கட்சியில் எவ்வளவு உள்ளது என்பதை அறிய முடியும்.
அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதே திமுகவின் நோக்கமாக இருக்கும். அதில், இளைஞரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வந்தால் நிச்சயமாக கட்சித் தலைமை இடம் கொடுக்கும். அதைத்தாண்டி இளைஞர் அணியின் தாக்கம் கட்சியில் இருக்காது என்பதுதான் என் கருத்து. திமுக தலைவர் ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தபோது ஒருபோதும் அப்போதைய திமுக தலைவர் கருத்திற்கு நிகராக கருத்து தெரிவிக்க மாட்டார், ஆனால், உதயநிதி ஸ்டாலின் தனக்கென்று இருக்கும் கருத்துகளை தொடர்ந்து அறிவித்துவருகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: சூர்யாவின் கருத்துக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்