சென்னை:சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள் ஏன் அரசு பள்ளிகளில் படிப்பது இல்லை?.., மேலும் 60,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரசுப்பள்ளி ஆசிரியை 6000 ரூபாய் சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியரிடம் தனது குழந்தையை கல்வி கற்க அனுப்புவது ஏன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சுதந்திரப்போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் 77ஆவது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது, 'அம்பேத்கருக்கு தமிழில் கையெழுத்துப்போட கற்றுக்கொடுத்தவர், இரட்டைமலை சீனிவாசன். புதிதாக கட்டக்கூடிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும். பாஞ்சான்குளத்தில் குழந்தைகளிடம் சாதிப்பாகுபாடு காட்டும் செயல் குறித்து சமூக நீதி, பெரியார் மண் என்று பேசக்கூடிய அரசிடம் இதைப் பற்றி கேட்க வேண்டும்' என்றார்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா வைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறதே என்ற கேள்விக்கு, 'மத்திய அரசு அனுமதி கொடுத்தால் அதை நாங்கள் அனுமதிக்க வேண்டுமா, அதையும் மீறி இங்க பேனா சின்னம் வைக்கட்டும்; பிறகு பார்த்துக்கொள்வோம். ஆர்.எஸ்.எஸ்-இன் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தும், ஷாகா வகுப்புகள் நடத்தவும் அனுமதி கொடுத்து, அதற்கு நன்றிக்கடனாகத் தான் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பதற்கு அனுமதி பெற்று இருக்கிறார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதை வரவேற்கிறேன். குழந்தைகளுக்கு உணவளித்து படிக்க வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அரசியலுக்காக செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டு உடனேயே கை கழுவிவிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அதுதான் மாடல் அரசு. மாடல் என்பது நடிப்பது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அறிவு உலகை வளர்ப்பது கல்வி; அதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம். தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் முதலமைச்சரின் பேரன் அமர்ந்து சாப்பிடுவதைப்போல் தரமானதாக இருக்குமா’ எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், 'எந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகன்கள், பேரன்களாவது அரசுப் பள்ளியில் படிக்கிறார்களா?..., அந்த அளவு தரமில்லாமல் தான் அரசுப் பள்ளிகள் உள்ளன. அமைச்சர் பிள்ளைகளையும் காலை உணவுத்திட்டத்தில் அமர்ந்து சாப்பிடச்சொல்ல வேண்டும். மஞ்சப்பை என்ற திட்டம் ஒரு நாள் தான் செயல்பட்டது. இப்போது எங்கு சென்றுவிட்டது. இதுதான் மாடல் அரசு.
60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அரசுப்பள்ளி ஆசிரியை 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியையிடம் தனது மகனைப் படிக்க வைக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம். அந்த அளவிற்கு அரசுப் பள்ளிகளில் கல்வி தரம் இல்லாமல் உள்ளது’ என்றார்.
தமிழ்நாட்டில் நான்கு முதலமைச்சர் ஆட்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு, 'அவருக்கு கணக்கு தெரியவில்லை. தவறாக கூறுகிறார்' என்று சிரித்தார், சீமான்.