சென்னை: பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள சசிகலாவை சந்திக்க அமமுக நிர்வாகிகள், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை கட்சித் தலைவர் தனியரசு, அதிமுகவின் சில நிர்வாகிகள் என காத்து கொண்டுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அறிவுரைப்படி 2 வார காலம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதால் தி. நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இல்லத்தில் சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார்.
ஜெ பிறந்தநாள்- சசிகலா திட்டம்
சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூரில் இருந்து தமிழ்நாடு வந்தார். எல்லையில் இருந்து சென்னை வரை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு வந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரையும் சந்திக்காமல் தனிமையில், அரசியல் நகர்வுகளை கவனித்து வருகிறார் சசிகலா.
ஜெ பிறந்தநாளையொட்டி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரடியாக ஜெ நினைவிடத்தில் மரியாதை செலுத்தவிருக்கும் நிலையில், சசிகலா தி. நகரில் உள்ள இல்லத்திலேயே ஜெ திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் சென்று உறவினர்களைச் சந்திப்பார், அதிமுக பலம் வாய்ந்த தென்மாவட்டத்தில் சுற்றுபயணம் செய்து மக்களை சந்திப்பார் என செய்திகள் வெளிவந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே சசிகலா முகாமில் பலத்த அமைதி நிலவுகிறது. இருப்பினும், தேர்தல் அறிவிப்பிற்கு பின் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரம் இருக்கும் வரை அதிமுக தரப்பில் எந்த நிர்வாகியும் சசிகலாவை சந்திக்க வாய்ப்புல்லை எனவும், மீறி யாரேனும் சசிகலாவைச் சந்தித்தால் கட்சி ஒழுங்கு நடவடிக்கை இருக்கும் என்பதால் அதிமுக நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கவனம் கட்சியா, ஆட்சியா?
அதிமுக பொதுச்செயலாளராக நீக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மேலும், வழக்கின் விசாரணை மார்ச் 15ஆம் தேதி பட்டியலில் உள்ளது. தேர்தல் நேரத்தில் நெருக்கடி அளிப்பதற்காக வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளார்.