தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈஷா யோகா சொத்துகள் அரசுடைமை ஆக்கப்படுமா?: அமைச்சர் சேகர் பாபு பதில்! - ஈஷா கோயில்

சென்னை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சொத்துகளை அரசுடைமையாக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகிய நிலையில், இதனை அவர் மறுத்துள்ளார்.

 Isha Yoga properties be nationalized
Isha Yoga properties be nationalized

By

Published : May 11, 2021, 10:37 PM IST

Updated : May 11, 2021, 10:46 PM IST

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்தில் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் நாளை (மே 12) முதல் தொடங்குகிறது. இதன் மூலம் ஏழை - எளிய மக்கள் பயன்பெறுவார்கள். இந்த அன்னதானம் அனைவருக்குமானது. இதில் இனம், மதம் என்ற பிரிவு கிடையாது. கரோனா தொற்று இனம், மதம் என்ற பாகுபாடு காட்டாததைப்போல, இந்த அன்னதானமும் அனைவருக்குமானது.

பெருந்தொற்றைச் சமாளிக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பெரும் முயற்சிக்கு ஒரு சிறு பங்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் வாடகை நிலுவைத் தொகையை விரைந்து வசூலிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

இந்து சமய அறநிலையத்துறை, இனிவரும் காலங்களில் சிறப்பாக செயல்படும்” என்றார். கோயில்களில் முறையாக பூஜை நடத்தப்படவில்லை என ஈஷா யோக நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குற்றச்சாட்டு முன்வைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கடந்த பத்தாண்டுகளாக யாருடைய ஆட்சி நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தான் நாங்கள் ஆட்சிக்கு வந்து இருக்கிறோம். ஓராண்டுக்குப் பின் இந்த கேள்வி கேளுங்கள். ஓராண்டுக்குப் பின் இந்த கேள்வி கேட்பதற்குத் தேவையே ஏற்படாது" என்று பதிலளித்தார்.

மேலும், ஈஷா யோகா மையத்தின் நிதி ஆதாரங்களில் முறைகேடு உள்ளதாகவும், இதனால் அம்மையத்தை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்க முடிவு செய்துள்ளதாகவும் இணையத்தில் செய்தி வெளியாகி வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அம்மாதிரியான முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை" என சேகர் பாபு பதிலளித்தார்.

"இப்போதுதான் நாங்கள் ஆட்சிக்கு வந்து இருக்கிறோம். தவறு எங்கு நடந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் சேகர் பாபு பதில் கூறினார்.

Last Updated : May 11, 2021, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details