தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதா? - உயர்நீதிமன்றம் கேள்வி - EWS

பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jun 20, 2023, 9:40 PM IST

சென்னை:பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் இந்திய அரசியல் சாசனத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் அர்ச்சகர், பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என உயர் கல்வித்துறையும், கல்லூரி கல்வி இயக்குநரகமும், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க:"செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியவில்லை" - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புலம்பல்!

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த அரசியல் சாசன திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் முடிவெடுக்கப்பட்ட பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் செல்லும் என கடந்த 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும், அதை எதிர்த்த மறு ஆய்வு மனுக்களை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் சுட்டிக்காட்டி, இந்த இட ஒதுக்கீட்டை உயர் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தக் கோரிய தங்கள் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை ஜூலை 10ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: TNPSC: குரூப் 4 காலி பணியிடங்கள் 10,219ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details