சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 9ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வனத்துறையில் பணி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று வருடத்திற்கு மேல் ஒரே இடத்தில் அல்லது வனச்சரகத்தில் பணி செய்யும் அலுவலர்களை, வேறு இடத்திற்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
எனினும் பெரும்பான்மையான இடங்களில் அலுவலர்கள் ஒரே இடத்தில் அல்லது வனக்கோட்டத்தில் பணி புரிகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில்,
ஆள்பற்றாக்குறையால் வன உயிரினங்கள் பாதிக்கக்கூடும்: "வனத்துறையில் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரே மாவட்டம் மற்றும் கோட்டத்தில் பணியாற்றுவதால், வனக்குற்றங்களை கண்டு கொள்ளாமல் இருக்ககூடும். இதனால் அதிகாரிகள் மக்கள் பணிகளில் கூட அலட்சியம் காட்ட நேரிடும். கோயம்புத்தூர் மற்றும் முதுமலை வெளிமண்டலங்களில் வனக்குற்றங்கள் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு உதாரணமாக மசினகுடி அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு புலி ஆவரலா காட்டிலும் , அறிய வகை விலங்கான, கழுதைப்புலி (hyena) மாவனல்லா-மசினகுடி சாலையில் நள்ளிரவில் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. இதனை வனத்துறை விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் விசாரணை எதுவும் வனத்துறை செய்யவில்லை.
தங்களின் மேலிட செல்வாக்கினாலும் சிலர் இடமாறுதலில் தப்புகின்றனர். வேண்டியவர்களுக்கு பணியை செய்துகொடுகின்றனர். எனவே அரசு இதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். வனத்துறையில் போதுமான அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்த போதிலும், முக்கிய வனச்சரகங்களில் ஆள்பற்றாக்குறை உள்ளது. இதனால் காடுகள் மற்றும் வன உயிரினங்கள் பாதிக்கக்கூடும்” என எச்சரிக்கை விடுத்தார்.
மூன்று வருடத்திற்க்கு ஒரு முறை: இதே போல வன ஆராய்ச்சியாளர் ஜோசப் ஹூவர் நம்மிடம் கூறுகையில், "தமிழ்நாடு வன சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் மற்றும் சில வனக்கோட்டங்களில் பெரும்பான்மையான அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிகின்றனர்.
எனவே அவர்கள் உள்ளூர் மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நேரிடும். இது ஒரு ஆரோக்கியாமான நடைமுறை இல்லை. இது தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமை நீடிக்கிறது.