சென்னையில் கண்ணீர் மல்க பெண் காவல்துறையிடம் புகார் சென்னை:சென்னை மாநகரின் பெரியமேடு, சிங்காரத்தெருவை சேர்ந்தவர் ஒரு நபர். இவரது மனைவி ஜோதி (பெயர் மாற்றப்பட்டது). இவர்கள் இரண்டு பேரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வெவ்வேறு இடத்தில் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக வாழ்க்கையை நல்ல முறையில் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த நபர் தனது மனைவிக்கு ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். அவரை தனது நண்பர்களுடன் தனிமையில் இருக்குமாறு வற்புறுத்தியதோடு இதற்கு மறுத்த ஜோதியை தலையில் பலமாக தாக்கி சித்ரவதை செய்து வந்துள்ளார். இவரின் சித்ரவதையில் சிக்கி செய்தவறியாத நிலையில், அவரது நண்பர்களுடனும் திருமணத்தை மீறிய உறவில் கட்டாயப்படுத்தி இருக்க வைத்ததாகவும், இக்கொடுமையின் உச்சமாக அதனை அவரது கணவரே வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நபர் அவருடைய நண்பர்களை இதுபோன்று தொடர்ந்து மூன்று முறை வீட்டிற்கு அழைத்து வந்ததாக தெரியவருகிறது. மேலும், அந்த நபர் அவருடைய நண்பர்கள் மனைவியுடன் ஆபாசமாக இருந்த தனது வீடியோவை மொபைலில் அடிக்கடி பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சித்ரவதையை தாங்க முடியாத ஜோதி, தனது கணவரை கைது செய்ய வேண்டும் என பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதற்கேற்றவாறு அவருடைய கணவரும் எனக்கு விவாகரத்து வேண்டும் என அதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் பெரியமேடு காவல்துறையினர் விவாகரத்து கொடுக்க முயற்சி செய்கிறார்களே, தவிர அவரை கைது செய்ய முயற்சி செய்யவில்லை. அவர்களிடம் லஞ்சம் பெற்று அவர்களை கைது செய்ய மறுப்பு தெரிவிக்கிறார்கள் என ஜோதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆணையர் தலைமையில் இன்று (ஜூலை 8) குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஜோதி தனது கணவரை கைது செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதேவேளையில், அவருடைய கணவரும் எனக்கு விவாகரத்து வேண்டும் என மனு அளித்தார். இதுகுறித்து ஜோதி காவல்துறையினரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கும் கணவருக்கும், மனைவிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறுவதற்குள் அவரை காவல்துறையினர் வெளியே அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மனு அளிக்க வந்த 2 பெண்கள் மயக்கி விழுந்ததால் மேலும் பரபரப்பு ஏற்படவே அவ்விருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், குறைதீர்க்கும் முகாம் சர்ச்சையோடு தொடங்கி சர்ச்சையோடு முடிவுற்றது.
சென்னையில் ரவுடியிசம் இருக்காது: இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், "சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னையின் 12 காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்காக காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாம் இன்று (ஜூலை 8) நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார்.
மாதம் ஒருமுறை குறைதீர்ப்பு முகாம்: "பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், மாதம் ஒருமுறை சென்னையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த அனைத்து காவல் துணை ஆணையர்களுக்கு வலியுறுத்தப்பட்டதாகவும் கூறினார். புகாரளிக்க வருவோருக்கு சிஎஸ்ஆர் (CSR) அளிப்பதோடு, என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். மேலும், அந்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும். மனு அளிப்போருக்கு சிஎஸ்ஆர் அளிக்கவில்லை என்றால் உடனடியாக, இ-மெயில் மூலமாகவும் அல்லது காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்கலாம்.
சைபர் குற்றம் நடக்கும்போது அப்புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான், குற்றவாளிகளை கைது செய்யலாம். ஆகவே, இதை தாமதமில்லாமல் விரைந்து செய்ய சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார். சென்னையில் ரவுடிசத்திற்கு இடம் கிடையாது. இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுத்து அவை முற்றிலுமாக ஒழிக்கப்படும். போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதன் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: DIG Vijayakumar Suicide: முகாம் அலுவலகத்தில் என்ன நடந்தது? பாதுகாவலர் அளித்த புகார் என்ன?