சென்னை:ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா, கெட்டிசேவியூர் கிராமத்தில் உள்ள பெரிய கருப்பராயன் கோயிலில் பூசாரியாக இருந்த பொங்கியப்பன் கடந்த 2017 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்த கோயிலில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் ஆடித்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பூசாரி பொங்கியப்பனின் மனைவி தங்கமணி மற்றும் மகனைக் கோயிலுக்குள் நுழைய அந்த ஊரை சேர்ந்த அய்யாவு என்பவரும், முரளி என்பவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கைம்பெண் என்பதால் கோயிலுக்குள் நுழையக் கூடாது என மிரட்டுவதால், திருவிழாவில் கலந்துகொண்டு, கோயிலுக்குள் சென்று, வேண்டுதலை நிறைவேற்றுவதற்குப் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தங்கமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தங்கமணி தரப்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன், காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆகியோர் ஆஜராகினர். மனுதாரர் தங்கமணி ஒரு கைம்பெண் என்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதாக அவரது வழக்கறிஞர் இளங்கோவன் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கைம்பெண் கோயிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கைகள் தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் நிலவுவது துரதிருஷ்டவசமானது எனவும், பல சீர்திருத்தவாதிகள் இந்த அர்த்தமற்ற நம்பிக்கைகளை உடைக்க முயன்றாலும், சில கிராமங்களில் அது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.