சென்னை: ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து நேற்று (ஜூன் 17) காலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நளினியை விடுதலை செய்யக்கோரி ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142 உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அதிகாரம் போல, விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு வழங்கிய அந்த தீர்ப்பின் சாராம்சம் வெளியாகியுள்ளது. அதில் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது:"ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே விவகாரம் தொடர்பான வழக்கு நிலைக்கத்தக்கதல்ல.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு இந்திய அரசியல் சாசனம் 161 வது பிரிவின் கீழ் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானத்தை அனுப்பியதன் மூலம், அவரது ஒப்புதல் இல்லாமல் அரசே விடுதலை செய்யலாம் என கூற முடியாது.
அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்கத் தாமதித்தால் ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை என்ற நளினி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் கையெழுத்து இல்லாமல் குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. மாறாக, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. அதுபோன்ற சிறப்பு அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கு இல்லை.
விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆளுநருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கினாலும், அதன் மீது சட்டத்திற்கு உட்பட்டு முடிவெடுக்க ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. அதனால் ஆளுநருக்குத் தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை என்றும் கூறிவிட முடியாது. இந்த வழக்கில் ராஜீவ் காந்தியுடன் 9 காவல்துறையினர் உள்ளிட்ட 15 அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆளுநர் பரீசிலனைக்கு எடுத்துக்கொண்டு, அரசின் தீர்மானம் சரியா? தவறா? என முடிவெடுக்க வேண்டும்.
அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், அமைச்சரவை தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் 7 பேரையும் விடுதலை செய்யும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு கிடைத்த விடுதலை.. நளினி, ரவிச்சந்திரனுக்கு கிடைக்காமல் போனது ஏன் ? - தீர்ப்பின் முழு விவரம்..!