சென்னை: சூப்பர் ஸ்டைக்கர்ஸ் என்ற கால்பந்து கிளப்பின் லோகோ வெளியீட்டு விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஜெயக்குமார், “தமிழ்நாட்டின் விளையாட்டு தலைநகரமாக சென்னை இருக்க வேண்டும் என ஆசிய விளையாட்டு போட்டிகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னையில் நடத்தினார்கள்.
அப்போது பல விளையாட்டு மைதானங்களை உருவாக்கி, அதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டில் முதன்மையான மாநிலம் என ஜெயலலிதா உருவாக்கினார். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரின் செயல்பாடு கேவலமாக உள்ளது” என கூறினார்.
செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து பேசிய ஜெயக்குமார், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி, நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று ஸ்டாலின் கூறினார்.
அமலாக்கத்துறை கைது செய்து கைதி எண் கொடுக்கப்பட்ட நபர் எவ்வாறு அமைச்சராக தொடர முடியும்? அதுதான் எங்கள் கேள்வி. அதனால்தான் நாங்கள் ஆளுநரிடம் மனு அளித்தோம். எங்கள் ஆட்சி காலத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இது போன்று நீக்குங்கள் என ஆளுநரிடம் உதாரணங்களை நாங்கள் கூறினோம்.
இலாகா கவனிக்கத்தான் ஒரு அமைச்சர். இலாகா இல்லாத அமைச்சருக்கு எதற்கு மக்களின் வரிப் பணத்தை செலவு செய்ய வேண்டும்? மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் அமைச்சராக இருக்கும் நிலையில் விசாரணைக்கு எவ்வாறு ஒத்துழைப்பார்? ஒத்துழைக்க மாட்டார்கள். அமைச்சராக இருந்தால் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் பல உண்மைகள் வெளி வராமல் சென்று விடும்.