சென்னை:நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்ச ரூபாய் கடனை, லைகா நிறுவனம் தருவதாக ஏற்றுக் கொண்டு திரும்ப செலுத்தியது.
இது சம்பந்தமாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடனை திருப்பி செலுத்தாமல் உத்தரவாதத்தை மீறி வெளியான, "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்ற பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பாக டிபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் படியும் விஷாலுக்கு உத்தரவிட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டுமென்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர். அவ்வாறு செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனு முடித்துவைக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின் படி 15 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டதால் விஷாலின் புதிய படமான மார்க் ஆண்டனி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, எந்த படத்தையும் விஷால் நிறுவனம் தயாரித்து வெளியிடவில்லை.
மார்க் ஆண்டனி படம் விஷாலின் சொந்த தயாரிப்பும் இல்லை. படத்தில் ஒரு கதாப்பாத்திரமாக மட்டுமே நடித்துள்ளார். அதனால் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கேட்கப்பட்டது. விஷாலின் கோரிக்கை ஏற்று மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, விஷால் தரப்பில் சொத்து மற்றும் 4 வங்கி கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. விஷாலின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வங்கி கணக்குகள் எல்லாம் ஆன்லைனில் சுலபமாக கிடைக்கும் போதும் அலட்சியமாக விஷால் செயல்படுவதை ஏற்க முடியாது. உத்தரவை மதிக்காத விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பினார்.
விஷாலின் வழக்கை மட்டும் விசாரிப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல. வங்கி விவரங்களை தாக்கல் செய்ய அனுமதி வாங்கி விட்டு, ஏன் தாக்கல் செய்யவில்லை. இதுவரை பண பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை விஷால் தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்த விசாரணையின் போது கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: Selvaraghavan : பான் இந்தியா படத்தில் செல்வராகவன்! எப்ப ரிலீஸ் தெரியுமா?