பல லட்சம் மதிப்புள்ள காரின் முன்பாகம் எங்கேயாவது இடித்து சேதமடைந்து விடாமல் இருக்க பம்பரை பொருத்துகிறோம். ஆனால் விலைமதிப்பில்லாத நம் உயிரைப் பற்றிய சிந்தனையில்லாமல் இருக்கிறோம்.
ஓட்டுநர் சீட்டின் முன் இருபக்கத்திலும் ஏர்பேக் அமைந்திருக்கும், காரின் முன்பக்கம் எங்கேயாவது இடிப்பட்டு விபத்து நேரும்பட்சத்தில், அந்த ஏர்பேக் தானாகவே திறந்து அதிக காயம் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கும்.
இந்த ஏர்பேக் சிஸ்டம் வேலை செய்வதற்காக காரின் முன்பக்கத்தில் இருபகுதிகளிலும் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். அந்த சென்சாரில் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக அழுத்தம் ஏற்பட்ட உடனே காரின் உள்பக்கம் ஓட்டுநரின் இருபுறமும் ஏர்பேக் விரிந்துவிடும்.
பொதுவாக காரின் முன்பகுதி சேதம் ஆகக்கூடாது என்பதற்காக முன்பக்கம் பம்பர் பொருத்தப்படுகிறது. இப்போது என்ன நடக்கும்? ஏதாவது விபத்து ஏற்படும்போது பம்பர் இருப்பதால் காரின் ரேடியேட்டர் அடிபடாமல் இருக்கும், அதே நேரத்தில் ஏர்பேக்கின் சென்சார் போதிய அழுத்தம் கிடைக்காமல் முன்பக்க ஏர்பேக் வேலை செய்யாமல் இடித்த வேகத்தில் நாம் முன்பக்கம் சாயும்போதும், கண்ணாடியில் மோதி மூக்கு, தலைப்பகுதியில் அடிப்பட்டு சில நேரங்களில் உயிரிழப்பு நேரிடும் ஆபத்தும் உள்ளது.
வாகனத்தின் முன்பக்கத்தில் பொருத்தப்படும் பம்பர் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கியக் காரணங்களாக உள்ளன. எனவே, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்களை பொருத்தக்கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆகவேதான் வாகன சட்டப்படி போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் அபராதம் விதிக்கிறார்கள்.
அரபு நாடுகளில் காவல் துறையினர் வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனத்திலும், பம்பரை காண இயலாது. மீறி இருந்தால் அது போக்குவரத்துக் குற்றமாக கருதப்படுகிறது.
ஆதலால், முன்பக்கம் பம்பர் பொருத்தும்போது ஓரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவோம்.