சென்னை:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு வடகலைப் பிரிவினர் வேதபாராயணம் செய்வதற்கு அனுமதி மறுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மே 14ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கக்கோரியும் நாராயணன் என்பவர் அவசர வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில் வடகலை, தென்கலைப் பிரிவினருக்கிடையேயான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரத்தில் தினசரி பிரச்னை ஏற்படுவதாலும், சாதாரண பக்தர்கள் முறையாக தரிசிக்க முடியாததாலும், அதை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், தென்கலைப் பிரிவினருக்கு மட்டுமே பிரபந்தம் பாட அனுமதித்தது பாரபட்சமானது எனக் கூறி, அறநிலையத்துறை உத்தரவு பிறப்பிக்கும் முன்பு உள்ள நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை (மே 17) தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வழக்கு... அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு...