சென்னை:பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை இதுவரை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? எனவும், புகார் அளிக்க வந்த பெண் அலுவலரைத் தடுத்தார் என எஸ்பியை மட்டும் சஸ்பெண்ட் செய்தது ஏன்? எனவும் உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றிவந்தவர் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஐபிஎஸ் அலுவலர் டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் (கூடுதல் தலைமைச் செயலாளர்) பிரபாகர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, உடனடியாக சிறப்பு டிஜிபியை கட்டாய காத்திருப்பில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிறப்பு டிஜிபி மீது எழுந்துள்ள பாலியல் புகாரை விசாரிப்பதற்காகத் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் கொண்ட விசாகா குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
மேலும், பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்த காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஜே.கே. திரிபாதி (பிப். 28) உத்தரவிட்டிருந்தார். சிபிசிஐடி விசாரிக்கத் தொடங்கிய பின் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாட்டையைச் சுழற்றும் நீதிமன்றம்
பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் தொல்லை விவாகாரம் குறித்து தானாக முன்வந்து வழக்கை விசாரனைக்கு எடுத்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'பெண் ஐபிஎஸ் அலுவலர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன, விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும், பெண் ஐபிஎஸ்க்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும் என்று மார்ச் 1ஆம் தேதி தெரிவித்தது இருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். ஆனால், வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி அனுமதி அளித்ததன் அடிப்படையில் இன்று (மார்ச்.12) அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாகா குழுவில் உள்ள ஒருவர் எவ்வித விசாரணையும் இல்லாமல் தன்னைத் தூக்கிலிட வேண்டும் என வாட்ஸ் அப்பில் விமர்சிக்கிறார் என சிறப்பு டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த பெண் அலுவலரைத் தடுத்தார் என எஸ்பியை மட்டும் சஸ்பெண்ட் செய்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிறப்பு டிஜிபி ஏற்கனவே 2002ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.