சென்னை: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் செல்வ சூர்யா அருகில் உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி பள்ளியில் கையில் சாதி ரீதியான கயிறு கட்டுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மாணவன் செல்வ சூர்யாவுக்கும், அதே பள்ளியில் பயின்று வரும் பிளஸ் 1 மாணவர்கள் மூன்று பேருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் செல்வ சூர்யா கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் (ஏப்ரல்.30) உயிரிழந்தார்.
செல்வ சூர்யா சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து இன்று (மே.4) முதலமைச்சருக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் எழுதி உள்ள கடிதத்தில்," திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவன் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பின்பு பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு சண்டையிட்ட மாணவர்களிடம் சமாதானமாக செல்வதற்கான எழுத்துப்பூர்வமா கடிதங்கள் பெறப்பட்டன. இரண்டு தினங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த மாணவனுக்கு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்றதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அகால மரணம் அடைந்தார். மரணம் என்பது யாராலும் ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும்.
இந்தப்பள்ளி மேல் நிலைப் பள்ளி ஆகும். இப்பள்ளியில் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று பணியிடம் இல்லை. இப்பள்ளியில் பணியாற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும் முதுகலை பட்டதாரிக்கான ஊதியம் பெறாதவர்கள். மேல்நிலை வகுப்புகளைக் கையாளக்கூடிய உடற்கல்வியில் உயர் கல்வி பயிலாதவர்கள்.
மாணவர்கள் நலன் கருதி, சமுதாய அக்கறையோடு மேல்நிலை வகுப்பு மாணவர்களைப் பார்த்துக் கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் வழங்கிய சன்மானம் பணியிடை நீக்கம். இந்தப்பள்ளியில் நடந்த மரணத்திற்கு உடற்கல்வி இயக்குநர்கள் இல்லாததுதான் காரணம்.
அரசின் உத்தரவின்படி உணவு இடைவேளையின் மற்றும் சிறு இடைவேளை போன்ற நேரங்களில் அனைத்து ஆசிரியர்களும் குழு அமைத்து மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும். இந்தப்பள்ளி மேல்நிலைப்பள்ளி என்பதால் தலைமையாசிரியர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். தலைமையாசிரியர் இல்லாதபட்சத்தில் பொறுப்பு வகிக்கும் உதவித் தலைமையாசிரியர் பொறுப்பேற்க வேண்டும்.