தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான் ஏன் மன்னிப்புக்கேட்க வேண்டும்? - விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ. ராசா சரமாரி கேள்வி - ஆ ராசா பேச்சு

மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வரும் நிலையில், “நான் ஏன் பேசியதற்கு மன்னிப்புக்கேட்க வேண்டும்..?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?  - விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ ராசா சரமாரி கேள்வி
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? - விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ ராசா சரமாரி கேள்வி

By

Published : Sep 20, 2022, 10:48 PM IST

சென்னை: சமீபத்தில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா இந்து மதம் குறித்துப் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஒருபக்கம் பாஜகவினரும் இந்து முன்னணியினரும் ஆங்காங்கே போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

இந்நிலையில், இதுகுறித்து திமுக விழா ஒன்றில் பேசிய ஆ.ராசா, “நான் ஏன் மன்னிப்புக்கேட்க வேண்டும்...?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல, அதன் பெயரால் கூறப்படும் சனாதானத்திற்கு எதிரானவர்கள்” எனப் பேசியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் அரங்கத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் முப்பெரும் விழா மற்றும் தலைவர் 'தளபதியின் தீரமிகு மடல்கள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜ கண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “கடிதம் எழுதுவது வாடிக்கை தான். இந்தியாவில் நேரு தான் கடிதம் எழுதும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தார். தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஹிந்தி மொழி திணிக்கப்படமாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத்திற்கு நேரு கடிதம் எழுதினார்.

தலைவர் கருணாநிதியின் கடிதங்களைப் படித்தால் கல்லூரிக்குச்செல்ல வேண்டாம் என்றார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என்று எல்லோருக்கும் தெரியும். திராவிடக் கொள்கையை கொண்டு சேர்ப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.

ஏன் கறுப்புசட்டை போட்ட எல்லோருக்கும் இருந்தது. ஆனால், வெட்கத்தை விட்டுச்சொல்லுகிறேன் அவர் திராவிட மாடல் ஆட்சிதான் செய்கிறார். சாராயம் குடிப்பது தப்பில்லை; குடிப்பவன் கெட்டவன் இல்லை. ஒரு லட்சியத்திற்காக நல்லவனாக இருக்க வேண்டும்.

நான் ஏன் மன்னிப்புக்கேட்க வேண்டும்? - விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ. ராசா சரமாரி கேள்வி

கார்ல் மார்க்ஸ் சாராயம் குடிப்பார், அவரை குடிகாரர் என்று கூற முடியுமா? அவரின் தத்துவத்தைத் தான் நாம் பார்க்க வேண்டும். பெரியார் திடலில் முதலமைச்சர் பேசினாலும் ஆ.ராசா பேசினாலும் விமர்சனம் செய்கிறார்கள்.

முதலமைச்சர் டெல்லி செல்வதற்கு முன் பெரியார் திடலில் பேசினார். நான் டெல்லிக்கு காவடி தூக்க செல்லவில்லை. உரிமையை கேட்கப்போகிறேன் என்றார். ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராகப் பார்க்கவில்லை. திராவிட தலைவராகத்தான் பார்க்கிறேன்.

தற்போது ஆ.ராசாவை மன்னிப்பு கேட்கச்சொல்கிறார்கள். நான் மன்னிப்புக் கேட்கத்தயாராக இருக்கிறேன். மன்னிப்புக்கேட்க மாட்டேன் என்று கூறுகிறவன் மனிதனே இல்லை. ஆனால், நான் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்.

பெரியார் திடலில் நான் இந்து மதத்தில் இப்படி இருக்கிறது என்று ஏன் பேசினேன். அதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேடையில் இருக்கும் எல்லா சாதியினருக்கும் கேட்கிறேன், மேடையில் உள்ளவர்களே எல்லாம் இந்துக்கள் தானே...?

இந்துக்கள் இரண்டு வகை, ஒன்று சனாதானத்தைப் பின்பற்றுபவர்கள்; மற்றொன்று அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவர்கள். ஆளுநர், பதவி ஏற்கும்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆளுநராகப் பதவியேற்றார்.

அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ரவி ஏன் சனாதானம் பேசுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏன் சனாதான தர்மத்தைப்பேச வேண்டும்? சனாதான தர்மம் என்பது வேதத்தின் அடிப்படையிலும், புனித புத்தகங்களின் அடிப்படையிலும் கொண்டு வரப்பட்டது.

ஆரியர்களாலும், ஆரிய மரபினத்தவராலும் கொண்டுவரப்பட்டது. ஆளுநர் சொன்ன சனாதான தர்மத்திற்கான அர்த்தம் என்பது, மனுதர்மத்தில் தான் இந்துக்களுக்கான சட்டமானது ஒதுக்கப்பட்டுள்ளது. நான் பேசினால் தானே தவறு; பெரியார் பேசியதை கூறுகிறேன்.

19/12/1973 அன்று பெரியார் பேசியதை கூறுகிறேன். சூத்திரன் என்ற பட்டம்போக வேண்டும் என நாம் இயற்றிய தீர்மானத்தை எதிர்த்து எவனும் எதிர்த்துப்பேசவில்லை. எவன் தான் விலைமாந்தரின் மகன் என கூறிக்கொண்டு வருவான் என்று பெரியார் கேட்டார்.

ஆரியர்கள் எங்களை ஆள வேண்டாம். நாட்டை விட்டு வெளியேறுங்கள், நீங்கள் விலைமாந்தரின் மகன் என்ற பட்டத்தைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தரவில்லை என்று இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகப் பெரியார் பேசினார்.

நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. இந்து மதத்தின் பெயரால் கூறப்படும் சனாதானத்திற்கு எதிரானவர்கள்” என்றார்.

இதையும் படிங்க: பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details